வீரதமிழர் முன்னணி

சோழர்கள்

சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. ‘சோழ நாடு சோறுடைத்து’ என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு ‘சோறநாடு’ ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து “சோழ” என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத் தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினார். 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், தற்போதய இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

பொ.ஊ. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் சாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், சிரீவிசயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. பண்டைய கால அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி.

முற்காலச் சோழர்கள்

முதன்மைக் கட்டுரைகள்: சங்ககாலச் சோழர் மற்றும் தொன்மச் சோழர்

இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களை தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி[சான்று தேவை] என்பவனாவான். இவனை பரணர், கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.

முதலாம் கரிகாலன்

கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. பொ.ஊ. 120

முதன்மைக் கட்டுரை: கரிகால் சோழன்

கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.[5] கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக “கல்லணை” விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

பிற சோழ மன்னர்கள்

கரிகால சோழன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

முற்காலச் சோழர்கள்

செம்பியன்
எல்லாளன்
இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி
நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கணான்
பெருநற்கிள்ளி

இடைக்காலச் சோழர்கள்

விசயாலய சோழன் பொ.ஊ. 848–881(?)
ஆதித்த சோழன் பொ.ஊ. 871–907
பராந்தக சோழன் பொ.ஊ. 907–955
கண்டராதித்தர் பொ.ஊ. 955–962
அரிஞ்சய சோழன் பொ.ஊ. 962–963
சுந்தர சோழன் பொ.ஊ. 963–980
ஆதித்த கரிகாலன் பொ.ஊ. 966–971
உத்தம சோழன் பொ.ஊ. 971–987
இராசராச சோழன் 1 பொ.ஊ. 985–1014
இராசேந்திர சோழன் பொ.ஊ. 1012–1044
இராசாதிராச சோழன் பொ.ஊ. 1018–1054
இராசேந்திர சோழன் 2 பொ.ஊ. 1051–1063
வீரராசேந்திர சோழன் பொ.ஊ. 1063–1070
அதிராசேந்திர சோழன் பொ.ஊ. 1067–1070
சாளுக்கிய சோழர்கள்
குலோத்துங்க சோழன் 1 பொ.ஊ. 1070–1120
விக்கிரம சோழன் பொ.ஊ. 1118–1135
குலோத்துங்க சோழன் 2 பொ.ஊ. 1133–1150
இராசராச சோழன் 2 பொ.ஊ. 1146–1173
இராசாதிராச சோழன் 2 பொ.ஊ. 1166–1178
குலோத்துங்க சோழன் 3 பொ.ஊ. 1178–1218
இராசராச சோழன் 3 பொ.ஊ. 1216–1256
இராசேந்திர சோழன் 3 பொ.ஊ. 1246–1279